Pages

படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Wednesday, April 13, 2011

ராகுல்காந்தியின் இரட்டை நாக்கு!



இந்தியா தனது கொள்ளுத்தாத்தா நேருவுக்கு சொந்தமானது என்றுதான் பேரப்பிள்ளை ராகுல்காந்தி நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தேர் தல் பிரச்சாரம் செய்ய வந்த இவர், தனது பாட்டி இந்திராகாந்தி தமிழ்நாட்டுக்கு வந்து விட்டு திரும்பும்போது தமிழ்நாட்டைப்பற்றி கதைகதையாகக் கூறுவார் என்று குறிப்பிட்டுள்ளார். பாட்டி வடை சுட்ட கதை, நரி ஏமாந்த கதை போன்ற கதைகளையும் கூட இவருக்கு சொல்லியிருக்கக் கூடும். வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக் கொள்வது குறித்தும் தமிழ்நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. இதையும் இந்திராகாந்தி இவருக்கு சொல்லிக்கொடுத்திருந்தால் நல்லது.

தமிழ்நாட்டில் திமுகவிடமிருந்து 63 தொகுதிகளை காங்கிரஸ் பறித்துக்கொண்டதற்கு இவரும் ஒரு முக்கியக்காரணம் என்று கூறப்படுகிறது. அந்த 63 தொகுதிகளிலும் உள்குத்தாக தமது இளைஞர் காங்கிரசை சேர்ந்த சிலருக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த சிலர் தொகுதியை இன்னும் தேடிக்கொண்டிருப்பதாக தகவல்.

தாம் சீட்டு வாங்கிக்கொடுத்த அவர்களுக்குக் கூட ராகுல்காந்தி முழுமையாக பிரச்சாரம் செய்யவில்லை. மின்னல் வேகத்தில் வந்துசென்றுவிட்டார்.

அப்படி வந்த இடத்தில், இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கு முழுமுதற்காரணம் கலைஞர்தான் என ஒரே போடாக போட்டிருக்கிறார். அப்படிப்பட்ட கலைஞரைத்தான் தில்லிக்கு வந்தபோது ஆறு மணி நேரம் இவர் காக்க வைத்ததாக தகவல். (தகவல் உதவி: தி.க.தலைவர் கி. வீரமணி) 

தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கேரளம் சென்ற இவர், அச்சுதானந்தனுக்கு இப்போது வயது 87 ஆகிறது. இவர் முதல்வராக வந்தால் ஐந்தாண்டு முடிவில் கேரளத்திற்கு 92 வயதுக்காரர்தான் முதல்வராக கிடைப்பார் என்று பேசியுள்ளார்.

நல்லவேளை இவர் காலத்தில் மகாத்மா காந்தி இருந்திருந்தால் அவரை கட்சியை விட்டு நீக்கியிருப்பார்.

தமிழ்நாட்டில் இவரால் பாராட்டப்பட்ட மு.க.அழகிரி உள்ளிட்டவர்களால் முதல்வராக முன்னிறுத்தப்படுகிற கலைஞருக்கு வயது 88. இவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால் ஐந்தாண்டு முடிவில் 93 வயதுக்காரர்தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பார்.

கலைஞர் மீதுள்ள கோபத்தை கேரளத்திற்கு சென்று காட்டியிருக்கிறார் ராகுல் காந்தி. அல்லது தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தபோது இவருக்கு கணக்கில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந் தன் தேர்தல் பிரச்சாரத்தில் துள்ளிக்குதித்து ஓடுவதை ஊடகங்கள் வியப்போடு எழுதுகின்றன. அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமென கூடுகிறார்கள். அண்மையில் சபரிமலை மீது ஏறி அடிப்படை வசதிகள் குறித்து அவர் நேரடியாக ஆய்வு செய்தது கேரளத்தில் மிகப் பெரிய செய்தியாக வெளியானது.

மத்திய அரசில் நிதியமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோரும் கூட வயதானவர்கள்தான்.

இவருக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்திருக்கிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். ‘ராகுல் காந்தி ஒரு அமுல் பேபி, சில அமுல் பேபிகளுக்காகத்தான் அவர் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கேரளக்கவிஞர் டி.எஸ்.சுப்பிரமணியன் திருமும்புவின் கவிதை ஒன்றை அவர் மேற்கோள் காட்டி ராகுலுக்கு பதில் சொல்லியுள்ளார். 

தலை நரைத்ததல்ல எனது முதுமை. 

தலை நரைக்காததல்ல எனது இளமை

கொடிய துஷ்ட அதிகார சக்தியின் முன்பு

தலை குனியாததே எனது இளமை

என்பது அந்தக் கவிதை.

16 வயதிலேயே சுதந்திரப்போராட்டத் தின் வழியாக தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், ராகுல் காந்தி 40 வயது வரை எங்கே போயிருந்தார் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

ராகுலைக்கேட்டால் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தேன் என்று கூறியிருப்பார். கோல்ப் மைதானத்தில் பந்துகளை அடிப்பதைப்போல சொந்த கட்சியினரையே உருட்டிக்கொண்டிருப்பதுதான் ராகுலின் சாதனை.

தமிழ்நாட்டில் பேசும்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி பற்றி பேசியிருக்கிறார். மத்திய உணவுக்கிடங்குகளில் வீணாகும் தானியத்தை ஏழை மக்களுக்கு தரமாட்டோம் என இவரது கட்சியின் தலைமையிலான அரசு கூறியதற்கு உச்சநீதி மன்றம் கண்டித்த செய்தியை இவர் அறிவாரா?

திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சனைக்கு மாநில அரசுடன் இணைந்து தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியே இன்றைக்கு ஊழல் முடை நாற்றம் வீசும் ஒரு கழிவுநீர் குட்டையாக மாறிக் கொண்டிருக்கிறது. இதை முதலில் சுத்தம் செய்யட்டும் இவர்.

- மதுரை சொக்கன்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...