Pages

படிக்க...

pimp myspace with Gickr

அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தை தமிழ்மணம் ‘ PAID AGGREGATION Category’ யில் வகைப்படுத்தி இருப்பதால், தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவில்லை. வாசகர்கள் google reader / e-mail subscriptions மூலமாக தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

Subscribe in a reader

Subscribe to தீக்கதிர் by Email

Thursday, April 14, 2011

துள்ளாத மனத்தையும் துள்ள வைத்த கவிஞர்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப் பூவுலகில் வாழ்ந்தது 29 ஆண்டுகள் மட்டுமே. 1930ம் ஆண்டு பிறந்த அவர் 1959ம் ஆண்டில் இயற்கை எய்திவிட்டார். 1954ம் ஆண்டு படித்தபெண் திரைப்படத்தில் அவரது முதல் பாடல்  இடம் பெற்றது. 56 படங்களுக்கு 196 பாடல் கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால் தமிழ்த் திரைப்பட வரலாற்றை எழுதுவோர் மட்டுமின்றி, தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவோரும் தவிர்க்க முடியாத பெயராக மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத் தின் பெயர் விளங்குகிறது என்றால், இதற்குக்காரணம் அவரது பாடல்களில் செறிந்திருந்த தத்துவத்தெளிவும், எளிமையும், லட்சியப்பிடிப்புமே ஆகும். 


திரைப்படங்களில் பங்கேற்ற கலைஞர்களின் பெயர்களைப் போடும்போது, பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற பெயர் வரும்போது மக்கள் ஆரவாரமாக கைதட்டி மகிழ்ந்தனர். இத்தகைய சிறப்பு பெற்ற முதல் திரைக்கவிஞர் இவர்தான். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் செங்கப்படுத்தாங்காடு என்ற சிற்றூரில் ஒரு எளிய உழவர் குடும்பத்தில் பிறந்த அவர், அதிகம் படிக்கவில்லை. பள்ளிக் கூடம் இல்லாத ஊருக்கு படிக்கப் போறேண்டா, அங்கே படிக்க வேண்டியது நிறைய இருக்கு படிச்சுட்டு வாறேண்டா என்று பாடிய அவர் அனுபவம் என்ற ஆசிரியரிடம்தான் அதிகம் படித்தார்.


உழவர்கள் படும் துயரத்தை இவர் அளவுக்கு யாரும் திரைப்பாடல்களில் இதுவரை சொன்னதில்லை. சும்மா கிடந்த நிலத்தை கொத்தி - சோம்பலில்லாமல் ஏர் நடத்தி- நெல்லு வௌஞ்சிருக்கு- வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு- அட காடு வௌஞ்சென்ன மச்சான்- நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்- என்பது எம்ஜிஆர் தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்த நாடோடி மன்னன் படத்தில் இவர் எழுதிய பாடல். இந்தத்திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1958. இன்னமும் கூட விவசாயிகள் நிலைமை இப்படித் தானே இருக்கிறது.


வருணாசிரம ஆதிக்கம் தொழில் ரீதியாக ஜாதிகளை பிரித்தது. குறிப்பிட்ட தொழில் செய்வோரை மட்டு மின்றி அந்தத் தொழிலையும் இழிவுப டுத்தியது. ஆனால் மக்கள் கவிஞரோ செய்யும் தொழிலே தெய்வம்- அதில் திறமை தான் நமது செல்வம் என்று பாடினார். தமிழ்த்திரையுலகில் பல்வேறு தொழில்களைப் பற்றியும், அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களைப் பற்றியும் இவரளவுக்கு யாரும் பாடியதில்லை. 

பாசவலை படத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் பாடுவதாக இவர் பாடிய பாடல் இது- கணக்குமீறி தின்றதாலே-  கனத்த ஆடு சாயுது- அதை கண்ட பின்னும் - மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது- பணக் கிறுக்கு தலை யிலேறி- பகுத்தறிவு தேயுது-
என்று கவிஞர் எழுதிய பாடலை இன்றைக்கு வெளிவரும் பல செய்திகளோடு பொருத்திப்பார்த்தால் பல உண்மைகள் புரியும். 


மாட்டுவண்டி ஓட்டிச்செல்லும் விவசாயத் தொழிலாளி உச்சி மலை யிலே- ஊறும் அருவிகள்- ஒரே வழி யிலே கலக்குது- ஒற்றுமையிலா மனிதகுலம்- உயர்வும் தாழ்வும் வளர்க்குது என்று பாடுவதாக அமைத்த கவிஞர், பள்ளம் மேடுள்ள பாதையிலே- பார்த்து நடக்கணும் காளைகளே- பழைய போக்கிலே பயனில்லை- நல்ல விஷயம் இருக்கணும் மூளையிலே என்று துவங்கியிருப்பார். டீ விற்கிற தொழிலாளி இப்படிப் பாடுவார்- பாட்டாளி தோழருக்கும்- பல தொழிலாளருக்கும்- கூட்டாளி யாயிருக்கும் டீ என்று பாடிச்செல்லும் கவிஞர், சகலரும் விரும்பும் டீ- பலருக்கு சாப்பாடு கூட இந்த டீ என்று கூறியிருப்பார். இது இன்று வரை எத்தனை எத்தனை அர்த்தம் பொதிந்த வரிகள். 


பாட்டாளி மக்களின் துயரங்களை பாடிய கவிஞர், அவர்களை ஆன்மீக போதையில் ஆழ்த்துவதில்லை. விரக்தி பள்ளத்தாக்கை நோக்கி விரட்டிவிடுவதும் இல்லை. ஒரு தாய் குழந்தைக்கு சோறூட்டுவதைப் போல நம்பிக்கையையும், போராட்ட உணர்வையும் குழைத்து தொழிலா ளர்களுக்கு ஊட்டிக்கொண்டே இருந் தார். நெடுங்கவலை தீர்ந்ததென்று- நெஞ்சில்  எழுதி ஒட்டிவை- நெரிஞ்சிக் காட்டை அழித்து- அதில் நெல்லு விதையை கொட்டிவை- ஏழைகளின் புது உலகம் தெரியுதடா- நாம் ஏமாந்து வந்த நிலை ஒழியுதடா என்று கூறுவார். அவரது பாடல்களில் இந்த நம்பிக்கை நதி ஊற்றெடுத்து பெருகிக்கொண்டேயிருக்கும்.


துள்ளாத மனமும் துள்ளும், உனக்காக  எல்லாம் உனக்காக, உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே, இன்று நமதுள்ளமே- பொங்கும் புதுவெள்ளமே, வாடிக்கை மறந்ததும் ஏனோ- எனை வாட்டிட ஆசைதானோ, நெஞ்சில் குடியிருக் கும்- அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா, ஆசையினாலே மனம்- ஓஹோ அஞ்சுது கொஞ்சுது தினம், துள்ளித் துள்ளி அலைகளெல்லம் என்ன சொல்லுது, ஆடை கட்டி வந்த நிலவோ,  என்னருமை  காதலிக்கு வெண்ணிலாவே என்று அவர் எழுதிய காதல் பாடல்களும் கூட காலத்தைக்கடந்து கானம் இசைத்துக் கொண்டிருக்கின்றன.


காதல் பாடல்களிலும், தாம் எழுதிய ஒன்றிரண்டு கடவுள் பாடல்களிலும் கூட பொதுவுடைமை கருத்துக்களை பொதித்து வைக்க பட்டுக்கோட்டை தவறியதில்லை. சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா என்ற பாடலில் நரம் போடுதான் பின்னி வளரணும் தன் மான உணர்ச்சி என்று கூறியிருப்பது சின்னப்பயல்களுக்கு அல்ல. பெரிய ஆட்களுக்குத்தான். காலம் கடந்து வாழ்கிறார் மக்கள் கவிஞர். காரணம் தமிழ் மண்ணின் காற்றோடு கலந்து கிடக்கிறது அவரது பாடல் வரிகள்.


(இன்று (ஏப்ரல் 14) மக்கள் கவிஞர் பிறந்த நாள்)

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...