தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தின் பல் வேறு இடங்களில் பல கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியுள்ள நிலையில், அறிவாலயத்தில் அவசரக்கூட்டம் கூடுகிறது.
கலைஞர்: ஆளுங்கட்சியை எதிர்க்கட்சியாக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தவறானது எனச் சொல்லமாட்டேன். தேர்தல் ஆணையம் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தேர்தல் ஆணையத்தினை குறை சொல்ல மாட்டேன்.
துரைமுருகன்: என்ன தலைவரே! கஜினி சூர்யா மாதிரி பேசுறீங்க! இப்ப நாம தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை எதிர்க்கிறோமா, இல்லையான்னு சொல் லுங்க தலைவரே . . .
அன்பழகன்: மாநில சுயாட்சி முழக்கத்தை நாம் கைவிட்டுவிட்டதால், மத்திய அரசை நம்பிக்கிடக்க வேண்டியுள்ளது. இப்போது தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ்தான் தூண்டிவிடுகிறதோ என்ற அச்சம் சில நாட்களாக இருக்கிறது.
கனிமொழி: திமுக கொள்கையை திஹாரில் விட்டு ரொம்பநாளாச்சுன்னு காங்கிரஸ் கட்சிக்காரங்க கூட சொல்றாங்க. திமுக, கொள்கையை மறந்த மாதிரி ஆ.ராசாவையும் மறந்துடுச்சுன்னு டில்லியில் உள்ள பிரஸ் நண்பர்கள் சொல்றாங்க.
துரைமுருகன்: கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியையே மறந்துட்டோம். கொள்கையை எப்படி ஞாபகத்தில் வைச்சுருக்க முடியும்?
கலைஞர்: பேராசிரியர் பெருந்தகை சொன்ன விஷயத்தை மறந்துட்டு, எதை எதை மறந்தோம்னு பேசிக்கிட்டு இருக்கிறீங்க! தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு எப்படி நாம் “செக்” வைக்கிறதுன்ற யோசனையை முதல்ல சொல்லுங்க . .
துரைமுருகன்: “ஆணையமா? ஆணவமா?” என்ற தலைப்பில நம்ம கவிஞர் வைரமுத்து தலைமையில் ஒரு கவியரங்கம் நடத்துவோம். தம்பி பா.விஜய் உள்ளிட்ட பலர் தயாராக இருக்கிறாங்க!
கனிமொழி: ஜெகத்ரட்சகன கவிதை வாசிக்க விட்டுறாதீங்க . . . அவரோட கவிதையைக் கேட்டு நான் கவிதை எழுதுவதை நிறுத்தியே நாளாச்சு! முழுசா என்ன எழுதவிடாமல் செய்துடாதீங்க!
ஆர்க்காடு: யார் கவிதை எழுதுறது, வாசிக்கிறதுன்றது முக்கியமில்லை. ஒவ்வொரு கவிதையும் ரொம்ப “பிரைட்டா” இருக்கணும்!
அன்பழகன்: என்னது பிரைட்டா? அப்படின்னா?
ஆர்க்காடு: சரி, சரி, அதுதான் சீட்டு தராமல் முடிச்சாச்சில்ல. . . கருத்து கூட சொல்லக்கூடாதா?
தயாநிதி: பிரம்மாண்டமா செட் போட்டுடுவோம். இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக எனச்சொல்லி 2 வாரம் எபிசோட் போட்டிரலாம்.
ஸ்டாலின்: அமிர்தம் மாமா கோவிச்சுகிடுவாரு மாப்ளே! கலைஞர்ல லைவ் செய்திடுவோம். என்ன நான் சொல்றது?
துரைமுருகன்: தயாநிதி தம்பி! நீங்க பார்க்க எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்னுறீங்க. பேசாமல் படத்தயாரிப்ப விட்டுட்டு நடிக்க வந்திடுங்களேன். உலகத்தொலைக்காட்சி, உள்ளூர் தொலைக்காட்சி எல்லாத்திலேயும் உங்க படத்த ரிலீஸ் செய்திடலாம்!
அழகிரி: நான் இருக்கிறத மறந்து நீங்களா பேசிக்கிட்டு இருக்கிறீங்க . . .
ஸ்டாலின்: கேப்டன்ன தாக்க நம்ம வடிவேலுவ தயார் செய்தது போல, தேர்தல் ஆணையத்தைத் தாக்கிப் பேச போண்டாமணியை விட்டா என்ன?
அன்பழகன்: தலைவரே! எனக்கு ஒரு யோசனை. நீங்க உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுற மாதிரி பிரதமருக்கு அடிக்கடி கடிதம் எழுதுற மாதிரி, ஒரு நாலு நாளைக்கு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினா என்ன?
(கனிமொழி சிணுங்கிய தொலைபேசி யை எடுத்தவாறு,) “என்ன அங்கயும் பிடிச் சாச்சா? அப்படியா?” எனக் கேட்டவாறு,
கனிமொழி: தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் ரைடுன்னு பணத்தைப் பிடிச்சுக்கிட்டு இருக்க மாதிரி, யாரோ தேர்தல் அதிகாரி மாதிரி வேஷம் போட்டு போன பணத்தையெல்லாம் மடக்கி எடுத்துட்டு போயிட்டானாம்!
அன்பழகன்: நீ வேற ஏம்மா! எதிர்க்கட்சிகளுக்கு எடுத்துக் கொடுக்கிற . . . காவல்துறை மந்திரியாக இருக்கிற முதல்வர் ஆட்சியில, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு அந்தம்மா பிரச்சாரம் செய்துக்கிட்டு இருக்கு. இந்த நேரத்தில பிடிச்சாங்க, பறிச்சாங்கன்னு பேசிக்கிட்டு . . .
ஸ்டாலின்: சரி ,இந்த பூனைக்கு யாருதான் மணி கட்டுறது?
கலைஞர்: பூனையை யாரு ஏவி விட்டதுன்னே தெரியல! அதுக்குள்ள மணி கட்டுறது . . . மந்திரிச்சு தாயத்து கட்டுறன்னு சொல்லிக்கிட்டு!
(அவசர அவசரமாக ஜெகத்ரட்சகன் வருகிறார்)
ஜெகத்ரட்சகன்: பார்த்தீர்களா தலைவரே . . . இந்த தேர்தல் ஆணையத்தின் ஆணவத்தை?
அன்பழகன்: அதைத்தான் பேசிக் கிட்டு இருக்கிறோம். என்ன செய்யலாம் நீங்க யோசனை இருந்தா சொல்லுங்க . . .
ஜெகத்ரட்சகன்: ஒரு பெரிய கவியரங்கம் நடத்திரலாம், இப்பத்தான் வைரமுத்து, பா.விஜய் கிட்ட தேதி வாங்கிட்டு வந்தேன்.
துரைமுருகன்: அய்யா பாராட்டு மன்னா! இந்த யோசனையைச் சொல்லித்தான் வாங்கிக் கட்டிக்கிட்டேன். திருப்பி திரியைக் கொளுத்திப் போடாதே.
(கவிஞர் வைரமுத்து மிடுக்குடன் வருகிறார்)
வைரமுத்து: டில்லி எப்போதும் நமக்கு வில்லி. காரிருள் தந்தவர்கள் மீண்டும் காரிருள் தருவது தகுமா? பிழைப்பது தான் நம் முறையா?
துரைமுருகன்: குரேஷிக்கு தமிழ் தெரியுமா எனத்தெரியவில்லை. நல்ல வேளை பிழைத்துக் கொண்டார்.
(ஸ்டாலினுக்குப் போன் வருகிறது)
ஸ்டாலின்: என்னது நடிகர் கார்த்திக் அறிவாலயம் வருகிறாரா? ஏற்கனவே கிணத்த காணோம்ன்ற பார்ட்டிய வைச்சுக்கிட்டு படுற பாடு தாங்கல. . . இதுல்ல வேட்பாளர காணல, தொகுதிய காணல எனச்சொல்றவருட்யேயும் வேற சிக்கணுமா? என பதற
கூடிய கூட்டம் திசைக்கு ஒன்றாக திகைத்து ஓடுகிறது.
கற்பனை: ப.கவிதா குமார்
No comments:
Post a Comment