பிரச்சாரத்திற்கு மேக்-அப்போடு கிளம்பிய வடிவேலு, வேனில் ஏறுவதற்காக காலை எடுத்து வைத்த போது தான் அந்தப் பேச்சுச் சத்தம் கேட்டது.
“இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...”ன்னு திமுக துண்டைத் தோளில் போட்டுக் கொண்டி ருந்தவர் கிசுகிசுத்துக் கொண்டிருந் தார். வடிவேலுவுக்கு தாங்க முடியவில்லை. வைத்த காலை பின்னுக்கு இழுத்தவர், அவர்க ளுக்கு அருகில் வேகமாகப் போய் நின்றார்.
“ஆமா.. என்ன சொன் னீங்க...”
அவர்களில் ஒருவர், “அதெல்லாம் ஒண்ணுமில்ல தம்பி” என்றார்.
“இல்லை... ஏதோ... இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்... அப்படினு சொன்னீங்களே... எதுக்கு...”
“விடுங்க, தம்பி. கிளம்புங்க...”
“இல்லை. அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கணும்...”
“வேண்டாம் தம்பி. அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க..”
(ஆவேசமான வடிவேலு) “ஏங்க என்னன்னு சொல்லாம இப்புடி மொட்டைக் கட்டையா சொன்னா எப்புடி..”
“அதான் சொன்னோமுல்ல தம்பி... நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்கன்னு...”
“ஏன்யா... ஊரே நாறிப்போய்க்கிடக்கு... ஊழல் அமவுண்ட் ரெண்டு லட்சம் கோடியத் தொடுதுங்குறாங்க... இருந்தாலும் ரெண்டு ஜோக்கச் சொல்லி சிரிக்க வெச்சு திசை திருப்பலாம்னு கிளம்பிருக்கேன்.. இப்புடி பொசுக்குனு இவன் சரிப்பட்டு வரமாட்டான்னு சொல்லிட்டா எப்புடி...”
“தம்பி... சொன்னா கேளுங்க... நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க...”
“யோவ்... என்னய்யா சின்னப்புள்ளைத் தனமா இருக்கு... புள்ள குட்டியெலாம் படிக்க முடியாம கரண்ட் கட் பண்ணி வெச்சுருக்கீங்கன்னு ஜனங்கள்லாம் குமுறிக்கிட்டு இருக்காங்க.. எனக்காவது சினிமா நடிகன்னு கூட்டம் கூடிருறாங்க... உங்களுக்குக் கூடுற கூட்டத்துல பாதிக்கும் மேல கரண்ட் இல்லாம வீட்டுல உக்கார முடியாத கூட்டம்தான்... ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கிட்டு, தொட்டுக்க ஊறுகாய் கூட வாங்க முடியாம அலர்றாங்க... குடும்ப ஆட்சி மாறி குடும்பம்தான் ஆட்சியாயிருக்கு... நேர்மையான அதிகாரிங்களுக்குலாம் அடி, உதை விழுந்துக்கிட்டு இருக்கு... “
அதுவரை அமைதியாக இருந்த மற்றவர், “விடுங்க தம்பி. நீங்க பிரச்சாரத்துக்குக் கிளம்புங்க...”
“எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு எனக்குத் தெரியணும். தெரியாம நகர மாட்டேன்..”
“தம்பி... தம்பி... நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க... போங்க...”
“யோவ்... ரெண்டு வாரத்துக்கு முன்னால நீங்க காங்கிரஸ் வேட்டியையும், அவங்க உங்க வேட்டியையும் உருவுன காட்சிய மக்கள்கிட்டருந்து மறைக்க பாட்டெல்லாம் பாடி ஓட்டுக் கேக்கறன்யா... வற்றாத ஜீவநதி தாமிரபரணிய வத்தலும், தொத்தலுமா மாத்திட்டீங்க... படிச்சவன்லாம் திமுகவுக்குத்தான் போடுவான்னு முந்தி பெருமையாச் சொல்லிக்குவீங்களே.. அதுவும் போச்சு... அதனால இப்ப பாமர மக்கள ஏமாத்தத்தான என்ன இறக்கிவுட்டுருக்கீங்க... அப்படியிருக்குறப்ப எதுக்குய்யா நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு சொல்றீங்க...”
தொகுதிப் பொறுப்பாளர் வருகிறார்.
“என்ன, பிரச்சார வேன்ல ஏறாம இங்க நின்னு பேசிட்டுருக்கீங்களே...”
“இவங்க என்ன சொன்னாங்கன்னு கேட்டுச் சொல்லுங்க... அப்புறமா நான் வேன்ல ஏர்றேன்...”
அவர்களைப் பார்த்து, “நீங்க என்ன சொன்னீங்க...” என்கிறார் பொறுப்பாளர்.
“இல்லீங்க... இவர் சரிப்பட்டு வர மாட்டார்...”
கொந்தளித்தார் வடிவேலு. “பாத்தீங்களா... பாத்தீங்களா.. இப்புடித்தான் ரொம்ப நேரமா பேசிட்டுருக்காங்க...”
இருவரும் பொறுப்பாளர் காதில் கிசு கிசுக்கிறார்கள்.
வடிவேலு பக்கம் திரும்பிய பொறுப் பாளர், “வாங்க நாம கிளம்பலாம்” என்றார்.
“இவங்க என்ன சொன்னாங்கன்னு...” என்று இழுத்தார் வடிவேலு.
“அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல வாங்க. அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க...” என்றார்.
அலறியே விட்டார் வடிவேலு.
“ஏன்யா.. உங்க தகிடுதத்த வேலை யெல்லாம் மறைக்க எப்புடியெல்லாம் பொய்ப் பிரச்சாரம் பண்ணிட்டு வர்றேன். என்னன்னு சொல்லாமயே இப்புடி சரிப்பட்டு வரமாட்டான்... சரிப்பட்டு வரமாட்டான்னு சொல்லிட்டே இருக்கீங்களே..” என்று தழுதழுத்தவாறு வேனில் ஏறுகிறார் வடிவேலு.
மைக்கைப் பிடித்த வடிவேலு, “நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு நீங்களாவது சொல்லுங்களேன்...” என்று பேச ஆரம்பித்தார்.
அய்யய்யோ... இவன் இதுக்கும் சரிப்பட்டு வரலையே என்று அலறினர் திமுகவினர்.
கற்பனை : கணேஷ்
நன்றி : தீக்கதிர்
No comments:
Post a Comment